×

குமரியில் தொடர் மழையால் 315 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

*1700 குளங்கள் நிரம்பின *சேத விபரம் கணக்கெடுப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கடந்த 1 வாரம் பெய்த தொடர் மழையால் 315 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது. நேற்றும் மழை இல்லாததால் படிப்படியாக தண்ணீர் வடிந்து வருகிறது.தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர் மழைக்கு மின்சாரம் தாக்கியும், வீடு இடிந்தும் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 53 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மழை ஓரளவு குறைந்துள்ளது.

நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக, பெருஞ்சாணி பகுதியில் 47.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 6மணி நிலவரப்படி பெருஞ்சாணி அணைக்கு 1,353 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 80 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 61 அடியாக இருந்தது.
பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 32.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,432 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 282 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றார்- 1, 14.56 அடியாகவும், சிற்றார்- 2, 14.66 அடியாகவும் உள்ளது. பொய்கை 9.20 அடி, மாம்பழத்துறையாறு 32.64 அடி, முக்கடல் 14.10 அடியாகவும் இருந்தன.

இந்த மழை காரணமாக மாவட்டத்தில் குளங்கள் வேகமாக நிரம்பி உள்ளன. பழையாறு வடிநில பகுதியில் மொத்தம் உள்ள 524 குளங்களில் 160 குளங்கள் வரை முழுமையாக நிரம்பி உள்ளன. தக்கலையில் உள்ள 777 குளங்களில் 240 குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. குழித்துறை பகுதியில் உள்ள 447 குளங்களில் 260 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன என்று பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை சுமார் 700 குளங்கள் நிரம்பி உள்ளன. மழை நீடிக்கும் என்பதால் குளங்களில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மழை குறைந்ததால், திற்பரப்பில் நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மழை குறைந்ததால், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. விளை நிலங்களிலும் தண்ணீர் வடிய தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே இந்த முறை கும்ப பூ சாகுபடி வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் கடந்த 1 வாரத்தில் பெய்த மழையில் 315 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது.
சேத மதிப்பீடுகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். வாழை பயிர்கள், ரப்பர் உள்ளிட்டவற்றுக்கான சேத மதிப்பீடும் ஆய்வு செய்யப்படுகிறது.

மழை அளவு (மில்லி மீட்டரில்)சிற்றார் 1, : 4.2
களியல் : 2
கன்னிமார் : 12.6 குழித்துறை : 2
நாகர்கோவில் : 2.2
பேச்சிப்பாறை : 6.2 பெருஞ்சாணி : 47.4
புத்தன் அணை : 45
சிற்றார் 2, : 2.6
சுருளோடு : 22.6 தக்கலை : 1.2
குளச்சல் : 8.6
இரணியல் : 2.4
பாலமோர் : 19.4
மாம்பழத்துறையாறு : 1
கோழிப்போர்விளை : 3.2
குருந்தன்கோடு : 10.8
முள்ளங்கினாவிளை : 4.2
ஆனைக்கிடங்கு : 1

The post குமரியில் தொடர் மழையால் 315 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது appeared first on Dinakaran.

Tags : Kumari ,NAGARKO ,KUMARI DISTRICT ,Nephir ,Dinakaraan ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!